கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'கவர்னரின் அதிகாரங்கள் குறித்து, தி.மு.க., எப்போதிலிருந்து பேசத் தொடங்கியது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, மாநிலம் முழுதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவருமான பி.டி. அரசகுமார், முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் தரப்பில், 'கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், அரசு துறை செயலரின் அனுமதி பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது' என்று, தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, 'கவர்னரின் அதிகாரங்கள் குறித்து, தி.மு.க., எப்போது முதல் பேச தொடங்கியது; கவர்னர் பதவியை, ஆட்டின் தாடியுடன் ஒப்பிட்டு, அது தேவையற்றது என்று நீங்கள் கூறவில்லையா' என, கேள்வி எழுப்பினார். மேலும் முன் ஜாமின் கோரி, எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள் என்றும் கேட்டார்.

அதற்கு மகேஷ் தரப்பில், இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய, இந்த மனு மீதான விசாரணையையும் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

@block_B@

'ஒப்புதல் பெற தேவையில்லை'



மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த பதில் மனு விபரம்: 'நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது' என, மனுதாரர் மகேஷ் தரப்பில் கூறும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஜூன், 23ம் தேதி அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், ஜூன், 27ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், 'கட்சி நிதி' என்ற பெயரில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, சட்ட ரீதியாக, கவர்னர் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. அரசு துறை செயலரின் ஒப்புதல் பெற்றே வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து வரும் நிலையில், அதை முடக்கும் வகையில், வழக்கை ரத்து செய்ய கோர முடியாது. வழக்கில் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது தான், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு குறித்து தீர்மானிக்க முடியும்.

தனியார் பள்ளிகளை அச்சுறுத்தி, வாக்குமூலங்களை பெற்று உள்ளதாக, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை. தற்போதைய நிலையில், விசாரணைக்கு தடை விதித்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை, 177 புகார்கள் வந்துள்ளன. எனவே, வழக்கை ரத்து செய்யக்கோரி, மகேஷ் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.block_B

Advertisement