அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை வசூலுக்கு 'NO'; அலுவலர்களுக்கு தடை

சென்னை: அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு வசூல் செய்ய, துறை செயலர்கள் வாயிலாக, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 41 அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டு தோறும், ஆயுத பூஜை கொண்டாட, அதிகாரிகள், அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களிடம் வசூல் செய்யப்படும்.

தீபாவளி பண்டிகைக்கும் சேர்த்து, இந்த வசூல் நடக்கும். இந்த நிதியை வைத்து, ஆயுத பூஜை பிரமாண்டமாக கொண்டாடப்படும். அலுவலகங்கள் வாழைக்கன்று, கலர் காகிதம் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கப்படும்.

பூஜை முடிந்த பின், அதில் பங்கேற்பவர்களுக்கு, பொரி, கடலை, தேங்காய், ஆப்பிள், வாழைப்பழம், சாத்துக்குடி, இனிப்பு ஆகியவை அடங்கிய, பை மற்றும் ஏதாவது பரிசுப் பொருள் வழங்கப்படும். எஞ்சிய தொகையை, அலுவலக உதவியாளர்கள், வாகன ஓட்டிகள் பிரித்துக்கொள்வர்.

த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக புகார் செய்வதற்கு, 'வாட்ஸாப்' எண் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நடப்பாண்டு ஆயுத பூஜை வசூலுக்கு, துறை செயலர்கள், இயக்குநர்கள், கலெக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

பூசணிக்காய், தேங்காய் உடைத்து, சாமி படங்களுக்கு பூ வைத்து, எளிமையாக ஆயுத பூஜை கொண்டாடினால் போதும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement