நவராத்திரி தொடக்கம் கொலு வைத்து வழிபாடு

கரூர்:இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றானது நவராத்திரி விழா. நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி, ஒன்பது நாட்கள் போரிட்டு, பத்தாவது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதற்காக, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவராத்திரி விழா, நேற்று தொடங்கியது.

இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொலு வைத்து வழிபட தொடங்கினர். இதேபோல், கோவில்களிலும் கொலு வழிபாடு, நேற்று தொடங்கியது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவுக்காக கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடவுள் பொம்மைகள், இயற்கை காட்சி, வனவிலங்குகள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் நவராத்திரி தொடக்க நாளையொட்டி, மூலவர் துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.

Advertisement