கிராவல் மண் எடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்பு; ஒப்பந்ததாரர்கள் கொடுக்காததால் பணிகள் நிறுத்தம்
சென்னை: 'ஏரிகள் மற்றும் குவாரிகளில் கிராவல் மண் எடுப்பதற்கு, ஆளும் கட்சியினரின் துாண்டுதலில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால், பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என, ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஆற்று மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கிராவல், சவுடு மண் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. இதில், ஏரி, குளங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் கிராவல் மண் எடுக்க, கனிமவளத்துறை, வருவாய் துறை வாயிலாக அனுமதி வழங்கப்படுகிறது. இப்பணிகளை முறைப்படுத்த, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், தேசிய, மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கு ஏரி, குளங்கள் மற்றும் குவாரிகளில், மண் எடுக்கப்படுகிறது. ஆனால், ஆளும் கட்சியினர், கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் தலையீட்டால், இந்த பணிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், சாலை அமைக்கும் பணிகள், குறைந்த விலையில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு, தரமான கிராவல் மண் எங்குள்ளது என்பதை அறிந்து, பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி, கனிமவள துறையில் விண்ணப்பித்தோம்.
இதற்கு, கனிமவள துறை தெரிவித்த கட்டணங்களை செலுத்தி, முறையாக அனுமதி பெற்ற நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள், கனிமவளத்துறை வாயிலாக லஞ்சம் கேட்டு பிரச்னை செய்கின்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனிமவளத்துறை அனுமதி அளித்த பின்னும், மண் எடுக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பிட்ட சில இடங்களில், 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டு தகராறு செய்கின்றனர். இதனால், தேசிய, மாநில நெடுஞ்சாலை பாதியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு லஞ்சத்தை ஒழிப்பதாக கூறும் நிலையில், கனிமவளத்துறை வாயிலாக, இப்படி பிரச்னை ஏற்படுத்துவது நல்லதல்ல. தமிழக அரசின் உயரதிகாரிகள் தலையிட்டு, ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களை பாதிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தம்மாம் ஏர்போர்ட் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி அரேபியாவில் பதற்றம்
-
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு
-
துவங்கியது நவராத்திரி கொண்டாட்டம்; பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சி
-
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் பேரணி: டில்லியில் 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
பண்டிகை காலங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?