சுப்ரீம் கோர்ட் கதவுகள் திறந்தே இருக்கும்; இண்டி கூட்டணியினரை சந்திக்க மறுத்தது குறித்து தலைமை நீதிபதி திட்டவட்டம்

8

புதுடில்லி: எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவியை விட்டு நீக்கக்கோரியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை சந்தித்து இண்டி கூட்டணி சார்பில் இன்று மனு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இண்டி கூட்டணியினரை சந்திக்க முடியாது என்று நீதிபதி சூர்யகாந்த் கூறிவிட்டார்.

இது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோருக்கு பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

டில்லியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்கச் சென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இண்டி கூட்டணியினரை சந்திக்க மறுத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது; இண்டி கூட்டணித் தலைவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. நேற்றிரவு அதற்கு நான் பதில் அளித்து விட்டேன். சில காரணங்களை குறிப்பிட்டு அவர்களை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டேன். நான் கூறிய காரணம் என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். நான் அதை வெளியிட மாட்டேன்.

உச்சநீதிமன்றத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. சாதாரண குடிமகனோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரோ, யாராக இருந்தாலும் மனு தாக்கல் செய்யலாம். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எங்களை அணுகும் உரிமை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு அவர்களின் குறைகளை நாங்கள் விசாரிப்போம். தகுதியுடையவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு கூறினார்.

Advertisement