பிரதமர் வருகையின் போது மரபை கடைபிடித்துள்ளார் முதல்வர் விஜய்; நயினார் நாகேந்திரன்

சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது; நிச்சயமாக தமிழகத்திற்கு வரவேண்டிய வளர்ச்சி திட்டங்களுக்கு பாஜ முன்னுரிமை கொடுக்கும். முதல்வரின் கோரிக்கை தான் தமிழக பாஜவின் கோரிக்கை. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை குறைப்போம் என்று கூறினார்கள். இன்னும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. 11 மதுபான நிறுவனங்களை நீக்கியுள்ளார்கள், மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். இது பற்றி அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். திருவள்ளுவரின் திருக்குறளை 63 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்த்துள்ளோம். சமீபத்தில் ரஷ்ய அதிபருக்கு கூட பிரதமர் மோடி ரஷ்ய மொழியில் திருக்குறளை வழங்கினார். நாங்களாவது திருவள்ளுவரை அங்கு வைத்துள்ளோம். ஒவ்வொருவரின் விருப்பப்படி, அவருக்கு ஆடை அணிவிக்கிறார்கள், அவ்வளவுதான்.

பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் இணைந்து கையைப்பிடித்து தான் மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்துள்ளனர். அதில், இருந்து உங்களுக்கு தெரியவில்லையா? பிரதமர் மோடி வரும் போது முதல்வர் சென்று வரவேற்பது என்பது மரபு. அந்த மரபை முதல்வர் விஜய் கடைபிடித்துள்ளார். முதல்வரை நேரில் சந்தித்தேன். அவருக்கு சால்வை அணிவித்தேன். அந்த மரியாதையை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

கடந்த முறை செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார் அமைச்சர் ஆதவ். ஆனால், இன்று அதே செவிலியர்களை கைது செய்துள்ளார்கள். இது முற்றிலும் தவறு. தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே அவர்கள் செய்யவில்லை. மகளிருக்கு ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் உள்பட எந்த திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை.

கரப்பான் பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பாலியல் வழக்கு, கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தான். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது. இவர்கள் எல்லாம் தேசத்தை துண்டாக்க நினைப்பவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement