கொத்தட்டை டோல்கேட் முற்றுகை: 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கொத்தட்டை டோல்கேட்டில், கிராம மக்கள் முற்றுகையிட்டதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில், கொத்தட்டையில் டோல்கேட் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிதம்பரம் அடுத்த சில்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அருள்குமார்,46; என்பவர் புதுச்சத்திரத்தில் இருந்து டாடா ஏஸ் வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, டோல்கேட்டில் சுங்க கட்டணம் கட்டுவதற்கு வண்டி நின்றபோது, வண்டியில் இருந்து அருள்குமார் இறங்கி நடந்து சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இரும்பு தடுப்பு கட்டை திடிரென அவர் தலையில் விழுந்தது. அதில், அவர் தடுமாறி கீழே விழுந்தார். இந்த காட்சி நேற்று சமூக வலைதளத்தில் பரவியது.

அதனைக் கண்ட கிராம மக்கள், அருள்குமாரிடம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அருள்குமார், நேற்று மாலை பூச்சி மருந்து குடிக்க முயன்றார். இதனால், ஆத்திரடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் டோல்கேட்டை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement