பட்டாக்களில் தொடரும் பிழைகளுக்கு 26 ஆண்டுக்கு பின் வருகிறது விமோசனம்

சென்னை: வருவாய் துறை ஆவணங்களை, ‘டிஜிட்டல்’ மயமாக்கிய பின்னும், பட்டாக்களில் பிழைகள் தொடர்கின்றன. 26 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் இதை சரி செய்வதற்கான அடிப்படை வழிமுறைகளை, வருவாய் துறை ஆராய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், 2000ம் ஆண்டு முதல் வருவாய் துறை ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக உருவாக்கப்படும் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், டிஜிட்டல் முறையில் தான் வருகின்றன.

ஆனால், பழைய பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் போன்ற ஆவணங்கள், டிஜிட்டல் மயமாக்கலுக்காக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவ்வாறு, பழைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ததில், பிழைகள் அதிகமாக காணப்படுகின்றன.

சொத்து பரிமாற்றத்தின் போது தான், மக்களுக்கு இந்த பிழைகள் குறித்து தெரியவருகின்றன. இதைத் திருத்த, பொது மக்கள் தனித்தனியாக மனு கொடுக்கின்றனர்.

கடந்த, 2000ம் ஆண்டில் இருந்து தொடரும் இந்த பிரச்னை குறித்து, பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தாலும், 26 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் இதன் தாக்கத்தை, வருவாய் துறை உணர்ந்துள்ளது. இதை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து, வருவாய் துறை நில நிர்வாக பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்ட ஆவணங்களில் பிழைகள் இருப்பதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பிழைகளை சரி செய்யாமல், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விற்பனை, கட்டட அனுமதி போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

தாலுகா வாரியாக முகாம்கள் நடத்தி, இப்பிரச்னையை தீர்க்க வேண்டும். குறிப்பாக, பல இடங்களில் தங்கள் நிலம் தொடர்பாக, கணினியில் பிழையாக பதிவு செய்யப்பட்ட விபரமே, மக்களுக்கு தெரியாத நிலை காணப்படுகிறது.

எனவே, மக்கள் பங்கேற்புடன், இதை சரி பார்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement