வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் மாநகராட்சி மீது தீர்ப்பாயம் அதிருப்தி

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் தினமும் 1,200 டன் குப்பை கொட்டப்படுகிறது. சரியாக மேலாண்மை செய்யாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. மாசு தடுப்பு கூட்டு குழு செயலர் மோகன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பழைய 750 டன் பழைய குப்பையை அகற்றாதது குறித்து, மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களில் பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், சேகரிக்கும் குப்பையை அந்தந்த பகுதியிலேயே மேலாண்மை செய்ய வேண்டும். மறுசுழற்சி பணி மந்தமாக உள்ளது என்று கூறினர்.

மாநகராட்சி சார்பில் கமிஷனர் ரவி தேஜா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரானார். தினமும் 600 டன் குப்பை மட்டுமே வெள்ளலூர் கொண்டு செல்லப்படுகிறது. மாநகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை செய்தால் மக்கள் எதிர்க்கிறார்கள். சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன், மாநகராட்சி அறிக்கையில் திருப்தி இல்லை. நுண் உர மையங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கு இல்லையென்றால் என்ன செய்திருப்பீர்கள். திடக்கழிவு மேலாண்மைக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை நவ.20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisement