மகாராஷ்டிராவில் 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: பழ மரங்களை காப்பாற்ற விவசாயிகள் பகீரத முயற்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சியால் திராட்சை, மாம்பழம், மாதுளை, வாழை உள்ளிட்ட பழப்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிணறுகள் வறண்டு, பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக வளர்த்த மரங்களையாவது காப்பாற்ற அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள 358 தாலுகாக்களில் 265 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இயல்பைவிட 18.8 சதவீதம் குறைவாக மழை பெய்ததும், நீண்டகால வறண்ட வானிலையும் பாதிப்புக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாக, மராத்வாடா, விதர்பா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் திராட்சைக் கொடிகள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. விவசாயத்துக்கான நீர் விநியோகமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பயிர்களை காப்பாற்ற ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என திராட்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திராட்சைக் கொடிகள் முற்றிலும் அழிந்தால், புதிதாக நடவு செய்து வணிக ரீதியான விளைச்சலைப் பெற குறைந்தது நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாம்பழம், மாதுளை, வாழை மற்றும் ஆரஞ்சு சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில், பழ உற்பத்தியில் 30 சதவீதத்தை மட்டுமே காப்பாற்ற முடியும் என வேளாண் நிபுணர் அனில் மெஹிர் தெரிவித்துள்ளார். மரங்களையும் மண்ணையும் கடுமையாக வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலை அமைக்கவும், அதற்கான மானியத்தை அரசு அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, விவசாயக் கடன்களை மறுசீரமைத்தல், நில வருவாய் சலுகைகள், மின்சாரம் தொடர்பான நிவாரணங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில அரச அறிவித்துள்ளது. பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசின் குழுவும் மகாராஷ்டிராவில் ஆய்வு நடத்தியுள்ளது.

இருப்பினும், உடனடியாக தேவைப்படுவது தண்ணீர்தான் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பருவ விளைச்சலை இழப்பதுடன், பல ஆண்டுகள் உழைத்து வளர்த்த மரங்களையும் இழக்க நேரிட்டால், விவசாயிகள் மீண்டும் வருமானம் ஈட்ட பல ஆண்டுகள் ஆகும் என்ற கவலை நிலவுகிறது.

Advertisement