இரட்டை கொலை இடத்தில் மது அருந்துவோர் அட்டகாசம்: கலெக்டர் அலுவலகத்தில் புகார்

சிவகங்கை: சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரட்டை கொலை நடந்த பின்னும், அங்கு அமர்ந்து தினமும் மது அருந்துவோரால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அல்லுார் ஊராட்சியின் கீழ் கொடிக்காடு, பையூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். இதில் கொடிக்காடு பகுதியில் 150 ரேஷன் கார்டுதாரர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெகு தொலைவில் உள்ள வண்டவாசிக்கு செல்ல வேண்டியுள்ளது. பையூர், கொடிக்காடு பகுதி மக்கள் ரேஷன் கடைக்கு கொடிக்காடு கண்மாய் வழியே தான் செல்ல வேண்டும்.

செப்., 16 அன்று இக்கண்மாய் பகுதியில் காயாஓடை புதுக்குடியிருப்பு தெய்வேந்திரன் 26, அவரது நண்பர் பூப்பாண்டி 25, இருவரும் காரை நிறுத்திவிட்டு மது அருந்தியபோது, டூவீலர்களில் வந்த கூலிப்படையினர் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இக்கொலை சம்பவத்திற்கு பின்னரும், தொடர்ந்து அங்கு கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொடிக்காடு கண்மாய் வழியாக வண்டவாசி ரேஷன் கடைக்கு செல்லும் பெண்களை குடிமகன்கள் கேலி செய்கின்றனர். அந்த வழியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக சிவகங்கை பைபாஸ் ரோடு, வண்டவாசி ரோடு ஆகிய இரு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் மதுவை வாங்கி விட்டு கொடிக்காடு கண்மாய் பகுதியில் அமர்ந்து தான் குடிக்கின்றனர். சிரமத்தை தவிர்க்க கொடிக்காடு பகுதியில் உள்ள 150 ரேஷன் கார்டுகளை சமத்துவபுரம் ரேஷன் கடையுடன் இணைக்க வலியுறுத்தி கொடிக்காடு கிராம பெண்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சைலேந்திரனிடம் மனு அளித்தனர்.

Advertisement