தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்

-சிறப்பு நிருபர்-

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் பதவியில் இருக்கும்போது மேற்கொள்ளும் அதிகாரப் பணிகளுக்கு எதிராக, எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் தொடர முடியாத வகையில் வாழ்நாள் சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில், 2023ல் மத்திய அரசு புதிய சட்டப் பிரிவை கொண்டு வந்தது.

இந்த சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் உச்ச நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 'நீதிபதிகளுக்கு நிகராக, தேர்தல் கமிஷனர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவது, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்த பிரிவு மூலம், தேர்தல் கமிஷன் எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிலை உருவாகிறது. எனவே, இந்த சட்டப் பிரிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேர்தல் கமிஷனர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பு வழங்கும் சட்டப் பிரிவுக்கு உடனடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசியல் சாசன அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு உயரிய நிர்வாக பதவிக்கு, இப்படியொரு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது.

எனவே, மனுதாரர் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுகள் குறித்து, மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement