மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை தேவை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது, ஊஞ்சல் மண்டபத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அனுமதிக்கப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தொடக்க காலத்தில் பூசாரிகள் மட்டுமே ஊஞ்சல் உற்சவத்தை நடத்தி வந்தனர். எப்போதாவது முக்கிய பிரமுகர்கள் வரும்போது ஊஞ்சல் . மண்டபம் மேலே அனுமதித்தனர்.

தற்போது, உபயதாரர்கள் என்ற பெயரில் நுாற்றுக்கணக்கானவர்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். அத்துடன் போலீசார், வருவாய்த்துறை, நீதித்துறை, அரசியல் பரிந்துரை என மேலும் நுாற்றுக்கணக்கானோரை அனுமதிக்கின்றனர்.

ஏற்கனவே அம்மனை துாக்கி வரும் வம்சாவழியினர் படிகளில் உட்கார்ந்து படிகளை முழுமையாக ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் ஊஞ்சல் மண்டபத்திற்கு செல்ல பக்க வாட்டில் மட்டும் குறைவான வழியே இருக்கிறது.

அத்துடன் கட்டுப்பாடின்றி அம்மன் வருவதற்கு முன்பே நுாற்றுக்கணக்கானோர் ஊஞ்சல் மண்டபத்திலும், அதன் அருகே மேளக்காரர்கள் அமர்வதற்கான இடத்திலும் படிகளின் பக்க வாட்டிலும் நிற்கின்றனர்.

இதனால் பல மணி நேரம் காத்திருந்து கீழே நிற்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. தொலை துாரத்தில் இருந்து வரும் பல லட்சம் பக்தர்களில் ஒரு சிலருக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் தரப்பில் எந்த கட்டணமும் நிர்ணயம் செய்யாத நிலையில் சிலருக்கு மட்டும் சலுகை எப்படி வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்த நெரிசலுக்கு காவல் துறையினர், கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் என யாரும் பொறுப்பேற்பதில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஊஞ்சல் மண்டபத்தில் மீது செல்பவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

கருரில் கூட்ட நெரிசலின் போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு வழிகாட்டு ஒழுங்குமுறையை அனுப்பியுள்ளனர்.

ஆனால், இதை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் மேல்மலையனுாரில் கடை பிடிப்பதில்லை. ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு முன் மேல்மலையனுார் அமாவாசை உற்சவத்தின் போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.

கூட்டம் அதிகமாகும் போது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ஊஞ்சல் மண்டபத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

உபயதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான அனுமதி வழங்குவதில் இந்து சமய அறநிலையத் துறையினர் வெளிப்படையான விதிமுறைகளையும், தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

சாதாரண பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு முன்னுரிமை அளித்து, அனைவரும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement