தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீராங்கனை அனன்யா சாம்பியன்

சென்னை: ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்த தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை அனன்யா முரளிதரன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் இருபாலருக்குமான 2-வது தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தாவ் தேவி லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் பல்வேறு வயது பிரிவுகளில் களமிறங்கியுள்ளனர்.

இதன் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த அனன்யா முரளிதரன் (17), கர்நாடகாவின் தனிஷ்கா கல்பைரவாவை (17) எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 11–6 எனக் கைப்பற்றிய அனன்யா, இரண்டாவது செட்டை 3–11 என இழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், மூன்றாவது செட்டை 12–10 என்றும், நான்காவது செட்டை 11–8 என்றும் கைப்பற்றினார். இதனால் 3–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக நடந்த அரையிறுதியில் மகாராஷ்டிராவின் ஸ்வரா கர்மார்கரை 3–0 என்ற நேர் செட் கணக்கிலும், காலிறுதியில் அதே மாநிலத்தின் திவ்யான்ஷி போமிக்கை 3–2 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி அனன்யா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்கள் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் டெல்லியின் ரித்விக் குப்தா (16), மேற்கு வங்கத்தின் ஆதித்யா தாஸை (17) 3–2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement