போலீசாரை தாக்கிய வழக்கில் மூவர் கைது

சூலூர்:சூலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், போலீசாரை தாக்கிய வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம் பட்டியை சேர்ந்தவர் ராம் பிரசாத், 25. தனியார் நிறுவன ஊழியர். இவரும் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த சண்முக பிரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வாரமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் கணவர் ராம் பிரசாத் பதிவிட்டதாக, சண்முகபிரியா சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணைக்காக நேற்று முன்தினம், ராம் பிரசாத் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அப்போது, சண்முக பிரியாவின் தம்பி அஸ்வின், 21, உறவினர்கள் சாமுவேல், 22, ஜான், உள்ளிட்டோர் ராம் பிரசாத்தை தாக்கினர். தடுக்க முயன்ற ஏட்டு பாலமுருகன், பெண் போலீஸ் பிரியா ஆகியோர் தடுக்க முயன்ற போது, அவர்களையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அஸ்வின், ஜான், சாமுவேல் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement