உயர்கோபுர மின்விளக்கு பழுது :இருளில் மூழ்கிய மைதானம்

மறைமலை நகர்: உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து மறைமலை நகர் நகராட்சி மைதானம், இருளில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மறைமலை நகர் நகராட்சி ஜி.எஸ்.டி., சாலை ஓரம் 6 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி மைதானம் உள்ளது. இங்கு மறைமலை நகர் மற்றும் அதை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு இரவு 10:00 மணி வரை பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து செல்கின்றனர்.

இந்த மைதானத்தில் நகராட்சி சார்பில் இரண்டு உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு பழுடைந்து 20 நாட்களாகியும் சீரமைக்கப்படவில்லை.

இதனால், மைதானத்தின் ஒரு பகுதி இருளில் மூழ்கியுள்ளதால், விளையாட்டு வீரர்கள், விஷ ஜந்துக்களின் அச்சத்துடன் பயிற்சி பெறுகின்றனர். எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement