பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: கல்லுாரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்பேடைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணிகண்டன், மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்த புகாரை அடுத்து, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், மாணவி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், ‘மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து’ உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு 7.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement