பனாமாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
பனாமா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
பனாமாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் தொடர்ச்சியாக கடற்பகுதியில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்ததாவது: பனாமா கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 35 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெர்ரேரா மாகாணத்தில் உள்ள பிடலோசா அர்ரிபா பகுதிக்கு தென்மேற்கே 10 கி.மீ., தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் 8.0 என அறிவித்து, பின்னர் 7.6 ஆக மாற்றி, இறுதியாக 7.7 என அறிவித்தது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் கடலோரப் பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.