போராட்டத்தில் பெண் நிருபரை கீழே தள்ளிய ராகுல்: பா.ஜ., கடும் தாக்கு

30

​புதுடில்லி: காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, செய்தி சேகரிக்க வந்த பெண் நிருபரை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கீழே பிடித்து தள்ளியதாக பா.ஜ., பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நேற்று நடந்தது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் ஒருவரை ராகுல் கீழே பிடித்து தள்ளி விட்டார்.

​இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது: காங்கிரஸ் போராட்டத்தில் செய்தி சேகரித்த பெண் நிருபரை, ராகுல் தன் முழங்கையால் தாக்கி, தோள்பட்டையை பிடித்து கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் நாங்கள் நலம் விசாரித்த போது, 'நான் ராகுலிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை; செய்தி சேகரிக்க மட்டுமே சென்றேன். ஆனால் அவர் என்னை பிடித்து கீழே தள்ளிவிட்டார்' எனக் கண்ணீருடன் கூறினார்.

​அங்கு நின்ற எந்த ஒரு காங்கிரஸ் நிர்வாகியும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சொந்தக் கட்சி முதல்வர் சிவக்குமாரையே பின்னால் தள்ளியவர் ராகுல். பெண்களை மதிப்பதாக வேடமிடும் ராகுலின் உண்மை முகம் இப்போது அம்பலமாகிவிட்டது. பெண் என்பதால் போராடுவேன் என முழக்கமிட்ட பிரியங்கா, இதற்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் சாடினார்.

​டில்லி பா.ஜ., துணைத் தலைவர் ராஜேஷ் பாட்டியா கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண் நிருபர் கர்ப்பிணியாக உள்ளார். ராகுல் தள்ளியதில் காயமடைந்த அவருக்கு உடனடியாக உதவ வேண்டும் என அவரது சகோதரி எங்களை அணுகினார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். என கூறினார்.

​மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு வன்முறையில் ஈடுபடக் கூடாது என பா.ஜ., எம்.எல்.ஏ., உமங் பஜாஜ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement