விஷவாயு தாக்கி கூலி தொழிலாளர்கள் மூவர் பலி விபரீதம்! மழைநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
கொடுங்கையூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருவேறு இடங்களில் மழைநீர் கால்வாய் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மூவர் இறந்தனர். இந்த விவகாரம், மாநகராட்சி தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது ஆண்டுதோறும் தொடர்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் முடங்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசும், மாநகராட்சியும் முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பூர் தொகுதி, 34வது வார்டுக்கு உட்பட்டது கொடுங்கையூர் தென்றல் நகர். இந்த நகரில் மூன்றாவது தெருவில், மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படாத வகையில், 20 அடி ஆழ மழைநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் கால்வாய் வழியே வரும் மழைநீர், இந்த தொட்டிக்குள் சென்று விடும். மழைநீரை அங்கிருந்து குழாய் மூலம் மக்கள் வசிப்பிடம் இல்லாத பகுதிக்கு வெளியேற்றும் வகையில், 25 எச்.பி., திறன் உடைய இரு மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின் மோட்டார் பழுதடைந்துவிட்டது. அதை சரி செய்ய, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்மத் பாஷா, 38, உள்ளிட்ட சில தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மழைநீர் தொட்டியில் உள்ள மின் மோட்டாரை சரி செய்யும் பணி நேற்று நடந்தது.
அஸ்மத் பாஷாவுடன் வேலைக்கு வந்த, தாம்பரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 34, மாலை 3:00 மணியளவில், மழைநீர் தொட்டிக்குள் இறங்கி, பழுதான மின் மோட்டாரை சரி செய்யத் தொடங்கினார்.
அப்போது, விஷவாயு தாக்கி நவீன்குமார் தொட்டிக்குள் மயங்கினார். அவரை காப்பாற்ற இறங்கிய அஸ்மத் பாஷாவும் விஷவாயு தாக்கி, மயங்கி விழுந்தார். இருவரையும் இறந்த நிலையில், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மழைநீர் தொட்டியை மாநகராட்சி நீண்ட நாட்களாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. அதோடு, கழிவுநீர் கலந்து தேங்கியதால், விஷவாயு உற்பத்தியாகி உள்ளது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதுபற்றி கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதுமே உயிர் பலிக்கு காரணம் என, கூறப்படுகிறது. சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மழைநீர் கால்வாய் முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வரும் நிலையில், இத்தகைய உயிரிழப்பு தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதி மாநகராட்சி பொறியாளர் கூறியதாவது:
பழுதான மோட்டாரை சரி செய்ய வேண்டிய இடத்தை, தொழிலாளர்களிடம் நேற்று காலை காண்பித்தோம். தேவையான கருவிகளுடன் பிற்பகலில் வருகிறோம் என்று கூறிச் சென்றனர். பிற்பகலில் வந்து, எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வேலையை தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்ததால் விஷவாயு பரவியதா என, விசாரணை நடக்கிறது. இதுபோன்ற நிகழ்வை யாரும் எதிர்பார்க்கவில்லை.
‘பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.
மேலும்
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்