எல்லாமே அரைகுறை தானா; சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்!

39

-நமது நிருபர்-

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், 14 குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நீதிபதி தலைமையில் சுதந்திரமான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ராகுல், மம்தா உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம், அதில் 14 குறைகள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிவது மனு தாக்கல் செயல்முறையின் ஒரு வழக்கமான பகுதிதான். அதன்படி இந்த குறைபாடுகள் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

விடுபட்ட அல்லது கையொப்பமிடப்படாத ஆவணங்கள், தெளிவற்ற துணை ஆவணங்கள் மற்றும் ரூ. 220 நீதிமன்றக் கட்டணப் பற்றாக்குறை ஆகியவற்றை பதிவாளர் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவில், தனிப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஏன் தனியார் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் பதிவகம் விளக்கம் கோரியுள்ளது.

மனுதாரர்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவர் கார்கேவின் அடையாள அட்டையின் தெளிவான, படிக்கக்கூடிய நகலையும் பதிவாளர் அலுவலகம் கோரியுள்ளது. மனுதாரர்களின் வக்காலத்து நாமாக்கள் இல்லை என்றும், சிலவற்றில் கையொப்பம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement