த.வெ.க., தயவில் பதவிகளை கைப்பற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வி.சி.,
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து, ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் அனைத்தும் ஒன்றிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சி செயலர்கள் மூலம் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து, அந்தந்த பி.டி.ஓ., மற்றும் பொறியாளர்கள் திட்ட மதிப்பீடு தயாரித்து நிறைவேற்றி வருகின்றனர்.
இருப்பினும், வாக்காளர்களாகிய பொது மக்களிடம் நற்பெயர் பெற வேண்டி, ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக் காலத்தில் குடிநீர், மின் விளக்குகள், கழிவுநீர் தேக்கம் போன்ற குறைபாடுகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன. ஆனால், அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அதுபோன்ற கண்காணிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளே போட்டி போட்டுக் கொண்டு பதவிகளை கைப்பற்றினர். ஆனால், வரும் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கு போட்டியாக ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.,வும் களமிறங்கும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான இடங்களில், பெரிய கட்சிகளின் ஆதரவு நிலையே எதிரொலிக்கும். இதனால், தி.மு.க., – அ.தி.மு.க., தயவில், அவர்களை சார்ந்த சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளும் பதவிகளை கைப்பற்றினர். இருப்பினும், பதவிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., – அ.தி.மு.க., நிர்வாகிகளை மீறி எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை இருந்தது.
இதனால், த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இம்முறை அதிக இடங்களை கைப்பற்ற முனைப்பு காட்டப்படுகிறது. தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக உள்ளாட்சிப் பதவிகளில் சேர்மன், துணை சேர்மன், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் என அதிக பதவிகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமங்கள்தோறும் கட்சியை பலப்படுத்தி சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு அடித்தளம் அமைக்க தயாராகி வருகின்றனர்.
இது குறித்து மூத்த அரசியல் பிரமுகர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் வி.சி.,யின் ஓட்டுகள் சராசரியாக த.வெ.க.,வுக்கு விழுந்துள்ளது. கடலுார் தொகுதியில் மட்டுமே த.வெ.க., வெற்றி பெற்றிருந்தாலும், மீதமுள்ள தொகுதிகள் அனைத்திலும் சொற்ப ஓட்டுகளில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதன் மூலம் வி.சி., ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு சென்று விட்டதாக பலரும் விமர்சித்தனர். இதையே சாதகமாக்கி, உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்ற அக்கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
ஆளுங்கட்சி ஆதரவுடன் ஒன்றிய சேர்மன், ஊராட்சித் தலைவர் போன்ற பதவிகளை கைப்பற்றினால், தொண்டர்களை சிதற விடாமல் வழிநடத்த முடியும் என்பதால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பதவிகளை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
மேலும்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
சவுதியில் இறந்த கணவர் உடலை மீட்க கோரி மனு
-
ரூ.5.45 கோடியில் கூடுதல் கட்டடம்: பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
-
டீசல், பேட்டரி, ஒயர்கள் திருட்டு: மாவட்ட விவசாயிகள் கண்ணீர்
-
பிச்சாவரத்தில் காட்டேஜ் இல்லையே? சுற்றுலா பயணிகள் ஏக்கம்... வனத்துறை கருணை காட்டுமா
-
ஓய்வு அரசு ஊழியரிடம் ரூ.28.50 லட்சம் மோசடி: கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது