5 சவரன் நெக்லஸ் போலீசில் ஒப்படைப்பு: வியாபாரிக்கு போலீஸ் பாராட்டு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பழைய துணிகளை வாங்கி பிளாஸ்டிக் குடம் வியாபாரம் செய்பவரிடம் பழைய துணியுடன் வந்த 5 சவரன் நெக்லஸ் யாருடையது என தெரியாத நிலையில் அந்த நெக்லசை போலீசில் ஒப்படைத்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி, 60; இவர் பழைய துணி வாங்கி பிளாஸ்டிக் குடம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் சேந்தநாடு, உடையானந்தல், மாரனோடை பகுதிகளில் பழைய துணிகளை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.

நேற்று அந்தத் துணிகளை பார்த்தபோது அதில் 5 சவரன் நெக்லஸ் இருந்தது தெரிய வந்தது. இதனைப் பார்த்த ஜானி, தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளாமல், இந்த நெக்லஸ் யாருடையது என்பதை தெரியாததால், நெக்லசை திருநாவலுார் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரிடம், உரியவரிடம் சேர்க்குமாறு ஒப்படைத்தார். ஜானியின் செயலால் ஆச்சரியமடைந்த போலீசார், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.

Advertisement