சிங்கப் பெண்கள் சிறப்பு கடன் முகாம்
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த ஏந்தல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவுத் துறை சார்பில் சிங்கப் பெண்கள் சிறப்பு கடன் முகாம் நடந்தது.
முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி துணைப் பதிவாளர் ரகு, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கள அலுவலர் நளினி வரவேற்றார்.
கூட்டுறவுத் துறை சார்பில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் சிங்கப்பெண்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாமும், வெள்ளிக் கிழமைகளில் மற்ற முன்னுரிமை துறை கடன் திட்ட முகாமும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏந்தல் கிராமத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் கடன் வழங்குவதற்கான முகாம் நேற்று நடந்தது.
இதில், மகளிர் மற்றும் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கூட்டுறவு துறை சார்பில் வழங்கப்படும் நீண்ட கால கடன், நடுத்தர கால விவசாய கடன், ஊரக தொழில் கடன், வீட்டு வசதி, வீடு அடமானம், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கையற்களுக்கான கடன், மின் ஆட்டோ கடன் குறித்து விளக்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
விண்ணப்பங்கள் மீது பரிசீலினை செய்து தகுதி வாய்ந்த குழுவினருக்கு கடன் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முகாமில், கள்ளக்குறிச்சி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயலாளர் ரஞ்சித், கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.