மூவரை தாக்கிய 6 பேருக்கு வலை

திருபுவனை: திருபுவனை அருகே தகராறை தட்டி கேட்டவர்களை தாக்கிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் டி.பி.ஜி., நகரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் தினேஷ், 30; டெக்கினிஷியன். கடந்த 11ம் தேதி இரவு தினேஷ், அவரது நண்பர்கள் முகுந்தன், அசோக் ஆகியோர் கலிதீர்த்தாள்குப்பம் – ஆண்டியார்பாளையம் சாலையில் சென்றனர்.

அங்குள்ள தனியார் மதுக்கடை அருகே ஒரு கும்பல் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அவர்களை தினேஷ் உள்ளிட்ட மூவரும் தட்டிக் கேட்டனர்.

ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மூவரையும் தடி மற்றும் கையால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த மூவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புகாரின் பேரில் கரைமேடு பிரேம்குமார், கே. ஆண்டியார்பாளையம் தமிழரசன், போஸ், வைத்தீஸ்வரன், தீரன், தர்ஷன் ஆகிய ஆறு பேர் மீதும், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement