ரஞ்சி கோப்பை: ராஜஸ்தான் 170 ரன்கள் முன்னிலை

சென்னை: ஜெய்ப்பூரில் நடந்து வரும் ரஞ்சி கோப்பைக்கான நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரஞ்சி கோப்பைக்கான எலைட் 'டி' பிரிவு லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியை எதிர்த்து மோதி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 363 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தமிழக அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தில் 98.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியில் ஆண்ட்ரே சித்தார்த் 192 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 55 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 58 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஜய் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ராஜஸ்தான் அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. மஹிபால் லோம்ரோர் 25 ரன்களுடனும், கார்த்திக் சர்மா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், சரவண குமார், சோனு யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி தற்போது 170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement