23 நாட்களாக தண்ணீர் வரல... கடுப்பான இடுவாய் மக்கள் சாலை மறியல் செய்து ஆவேசம்

மங்கலம்: மங்கலம் அருகே இடுவாய் பகுதியில் மூன்று வாரங்களாக குடிநீர் வரவில்லை என கூறி, பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மங்கலம் அருகே இடுவாய் செந்தில் நகரில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 23 நாட்களாக குடிநீர் வரவில்லை. ஆனால், அதேநேரம், அருகில் உள்ள வீதிகளுக்கு சீராக குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, முறையாக குடிநீரை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கூட, நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் இடுவாய் ரோடு பாரதிபுறம் பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ‘கடந்த, ஐந்து நாட்களாக தண்ணீர் கலங்கி வரும் காரணத்தால் விடவில்லை. இப்பிரச்னை உடனடியாக தீர்வு செய்யப்பட்டு நாளை (இன்று) செந்தில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்,’ என்று பி.டி.ஓ., செல்வகுமார் உறுதியளித்தார். இதனால், மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement