8 மாத உழைப்பு வீணானது: மபி நதியை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞர் வேதனை

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பியோரா நகரை சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி(21). கல்லூரி மாணவர். பிட்டு தபாஹி என அறியப்படுகிறார். அந்நகரில் ஓடும் அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்தார். ஜனவரி மாதம் முதல் தினமும் பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள், ரசாயன கழிவுகளை அகற்றினார். சுமார் 8 மாதம் அவரின் தொடர் பணியால் ஆறு சுத்தமானது. தூய்மை பணிக்கு முன்பும், பின்பும் எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஆனால், அந்த ஆறு தற்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் மாசடைந்து காணப்படுகிறது.

இதற்கு கவலை தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோவில்,'' எனது 8 மாத கடின உழைப்பு வீணாக போகும் என நான் நினைத்து பார்த்தது கூட இல்லை'' எனக்கூறியுள்ளார். மேலும், இந்த கழிவுகளை எப்படி அகற்றுவது என ஆலோசனை தரும்படி தெரிவித்தார். அதேநேரத்தில் மனம் தளராமல் மீண்டும் அந்த ஆற்றை சுத்தப்படுத்த போவதாகவும் கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், ஆலோசனை வழங்குகின்றனர். குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் வலியுறுத்துகின்றனர்.

Advertisement