ரஷ்யாவுக்கு உதவுகிறது அமெரிக்கா!: உக்ரைன் குற்றச்சாட்டு

2

​கிவ்: ரஷ்யா நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கிவ் உருக்குலைந்துள்ள நிலையில், 'ரஷ்யாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவி செய்கிறது' என உக்ரைன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

குற்றச்சாட்டு:



உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக நின்றுவந்த அமெரிக்கா தற்போது துரோகம் இழைப்பதாக உக்ரைன் புலம்பி வருகிறது. ரஷ்யா ஏவுகணைகளை ஏவும் தகவல்களை, முன்கூட்டியே உக்ரைனுக்குத் தந்து தற்காத்துக் கொள்ள, அமெரிக்கா உதவி வந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த உளவுத் தகவல்களைத் தருவதை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

​இதுமட்டுமின்றி, உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வரும் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்து முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவின் அதிவேக 'ஷாஹெட்' டிரோன்களை இடைமறித்து அழிக்க முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது.

​

தலைநகரில் ஏவுகணை மழை; 6 பேர் பலி:



முன்னெச்சரிக்கை சைரன் கூட ஒலிக்காத அளவுக்கு, கிவ் நகர் மீது ரஷ்யா சரமாரியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி விடிய விடிய தாக்கியுள்ளது. மக்கள் பதுங்கு குழிகளுக்கும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் ஓடுவதற்குள் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின. ​இந்தக் கோரத் தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். நகரின் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்து, தலைநகரின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

​ஜெலன்ஸ்கி கொந்தளிப்பு:



இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அநீதியானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியுள்ளது. அமெரிக்க அதிபரின் பேச்சை ரஷ்யா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

​டிரம்ப் மறுப்பு:



உளவுத் தகவல்களை நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதே சமயம், ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டு வருவதும், இதனால் உக்ரைன் - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement