என்.எல்.சி., அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு: நெய்வேலியில் துணிகரம்

நெய்வேலி: என்.எல்.சி., அதிகாரி வீட்டின் கதவை உடைத்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 26ல் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,59; என்.எல்.சி., முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் திருச்சி சென்றார்.

நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் மாடியில் உள்ள பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பிரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த தங்க வாட்ச் உட்பட மூன்றரை சவரன் நகைகள், 320 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ. 20 ஆ்யிரம் திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

புகாரின்பேரில் தெர்மல் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Advertisement