மனைவி, மச்சானுக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளிக்கு 'காப்பு'

நாமக்கல்:நாமக்கல், அணியாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 41; இவரது மனைவி புனிதா, 40; தம்பதியருக்கு, இரண்டு குழந்தைகள். குடும்ப பிரச்னை காரணமாக, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள ராஜாஜி நகரில், தன் தந்தை வீட்டிற்கு புனிதா, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு குழந்தைகளுடன் வந்தார். இரவு, 10:00 மணிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற கார்த்தகேயன், மனைவி புனிதாவை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.

புனிதாவின் அண்ணன் வேலுமணி, 42, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கார்த்திகேயன், அரிவாளால் வேலுமணியின் தலையில் வெட்டினார். அவரது அலறல் சத்தம்கேட்டு வெளியே வந்து தடுத்த புனிதாவையும், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து, அணியாபுரத்தில் பதுங்கிய கார்த்திகேயனை, நேற்று காலை, 10:00 மணிக்கு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement