பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த புலி பவானிசாகர் அருகே கிராம மக்கள் பீதி

பவானிசாகர்,:பவானிசாகர் அருகே பட்டப்பகலில் புலி ஊருக்குள் நுழைந்து விவசாய தோட்டத்தில் நடமாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில், புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொத்தமங்கலம், புதுப்பீர் கடவு மற்றும் பண்ணாரி வனப் பகுதிகளில் புலிகள் நடமாடுகின்றன. புதுப்பீர்கடவு கிராமம் அருகே செம்மலை அடிவார வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி புதுப்பீர்கடவு கிராமத்தை ஒட்டி உள்ள விவசாய தோட்டத்தில், நேற்று மாலை நடமாடுவதை கண்ட விவசாயிகள், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் புலி பதுங்கியது. இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனச்சரக அலுவலர் சங்கர், வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் புலி நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி அங்கிருந்து வெளியேறி ராஜீவ் கண்ணன் தோட்டத்திற்குள் நுழைந்தது. புலியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பதுங்கியுள்ள புலியால், மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement