த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி

ஈரோடு,:ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் தலைமையில் நடந்தது. திருப்பூர் இந்திய கம்யூ.,- எம்.பி., சுப்பராயன், கலெக்டர் கந்தசாமி, மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் திட்டங்களின் கீழும், பொதுவாகவும் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த எம்.பி., பிரகாஷ், கூறியதாவது:ஆட்சி மாற்றம் நடந்து புதிய அரசு வந்த பின் நடக்கும் இரண்டாவது கூட்டம். ஐந்து மாத காலத்தில், ஈரோடு மாநகர, மாவட்ட வளர்ச்சிப்பணிகள், மத்திய அரசின் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணியில், பல இடங்களில் தொய்வு உள்ளது. அரசின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. ஏற்கனவே டெண்டர் போடப்பட்ட சாலைப்பணிகளை நிறுத்தி வைத்தும், பில்களுக்கான நிதி விடுவிக்காமலும் உள்ளனர். ஐந்து மாதமாக புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்காமல் அப்படியே வைத்துள்ளனர். வரும் காலங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து மாவட்ட வளர்ச்சிக்காக வேலை செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பாசன நீர் பிரச்னை போராட்டமாகி உள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் இருந்தும் எந்த ஒரு முயற்சியும், முத்தரப்பு கூட்டமும் போடாமல் அரசு நிர்வாகம் செல்கிறது. சாலைப்பணியில் கரூர் சாலை, வெள்ளக்கோவில் சாலைப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
வெண்டிப்பாளையம் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்வதில் ஆறு மாதமாக எந்த பணியையும் புதிய அரசு துவங்கவில்லை. ஆனால் கடந்த ஆட்சியில் செய்யவில்லை என குறை கூறுகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் இறுதிக்கட்ட பணிகளை விரைவாக செய்து தர கேட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement