துர்கா பூஜை, ராம்லீலா கொண்டாட்டம்: கிழக்கு டில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடு

புதுடில்லி: துர்கா பூஜை மற்றும் ராம்லீலா ஆகிய கொண்டாட்டங்களை முன்னிட்டு, 20ம் தேதி வரை, கிழக்கு டில்லியின் பல சாலைகளில், இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, டில்லி மாநகர போலீசின் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

துர்கா பூஜை மற்றும் ராம்லீலா கொண்டாட்டங்களை முன்னிட்டு, கிழக்கு டில்லியில் மாலை நேரங்களில் பக்தர்கள், பார்வையாளர்கள் மற்றும் பாதசாரிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 20ம் தேதி வரை கிழக்கு டில்லியின் பல சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

திரிலோக்புரி, அமிசந்த் சவுக் முதல் பிளாக் 26 வரையிலான குதிராம் போஸ் மார்க், ஹாலிடே இன் சிக்னல் முதல் ஸ்டார் சிட்டி வணிக வளாகம் வரையிலான காஜிப்பூர் சாலை, மற்றும் கணேஷ் நகர் அக் ஷர்தாம் ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள சர்வீஸ் சாலை ஆகிய சாலைகளில், இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

அதேபோல, பாண்டவ் நகர் சுரங்கப் பாதை முதல் பட்பர்கஞ்ச் வழியாக ஆச்சார்யா நிகேதன் சந்தை வரையிலான பகுதி, டல்லுபுரா முதல் நொய்டா மோட் வரையிலான டில்லி போலீஸ் அப்பார்ட்மென்ட்ஸ் சாலை மற்றும் மயூர் விஹார் - 3- மற்றும் புதிய அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் சாலை ஆகியவற்றிலும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காஜிப்பூர் பேப்பர் மார்க்கெட் அருகே, முர்கா மண்டி முதல் கோடா காலனி வரையிலான பகுதி, ஒருங்கிணைந்த சரக்கு வளாகத்தில் உள்ள டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்கா அருகிலுள்ள காஜிப்பூர் சாலை, ஹசன்பூர் டி -பாயின்ட் முதல் தேசிய நெடுஞ்சாலை -24 வரையிலான சுவாமி தயானந்த் மார்க், பட்பர்கஞ்ச் சாலை, மது விஹார் சாலை மற்றும் சாய் சவுக் ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விகாஸ் மார்க், ராஜாராம் கோலி மார்க் மற்றும் ராம்லீலா, துர்கா பூஜை நடக்கும் இடங்களை ஒட்டியுள்ள சாலைகளில், வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஷாஹ்தரா சி.பி.டி. மைதானம் அருகே சூரஜ்மல் சாலை, விவேக் விஹார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே ராம்லீலா மைதானம் அருகேயுள்ள சாலை, சோனியா விஹார் ஜி.டி.பி., டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம் மற்றும் ஜி.டி.பி. மருத்துவமனை புஸ்தா, கராவல்நகர் வீர சாவர்க்கர் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதிகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement