ரூ. 8.50 லட்சத்துக்கு பாக்கு, பூண்டு விற்பனை

மேட்டுப்பாளையம்: காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த, பாக்கு, விதைப் பூண்டுகள் ஏலத்தில், ரூ.8.50 லட்சத்துக்கு விற்பனையானது.

காரமடை சிறுமுகை சாலையில், சாஸ்திரி நகரில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு, செவ்வாய்தோறும், பாக்கு மற்றும் விதைப்பூண்டு ஏலம் நடக்கிறது. இந்த வாரம் கோவை விற்பனை குழு செயலாளர் ஆறுமுக ராஜன் முன்னிலையில் ஏலம் நடந்தது.

ஒரு கிலோ வரப்பாக்கு, 180ல் இருந்து 190 ரூபாய் வரை ஏலம் போனது. பழப்பாக்கு 55 – 65 ரூபாய்க்கும், ஒரு கிலோ உரித்த ராசி ரகம் பாக்கு, 350 – 410 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், நான்கு லட்சத்துக்கு விற்பனையானது. கணக்குகள் சரிபார்த்த பின், அந்தந்த விவசாயிகள் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விதை வெள்ளைப் பூண்டு ஏலமும் நடந்தது. கிடங்கில் இருப்பு வைத்திருந்த விதைப் பூண்டு, 350 -– 500 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4.50 லட்சத்துக்கு விற்பனை ஆனது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், எவ்வித தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன் பெற, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விபரங்களுக்கு, 96592 42424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்தார்.

Advertisement