நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கமிஷனர் திடீர் ஆய்வு

உடுமலை: உடுமலை நகராட்சிப்பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும், காலை உணவுத்திட்டத்தினை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை நகராட்சிப்பகுதிகளில், 12 நகராட்சி ஆரம்ப பள்ளிகள், 6 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல், 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 23 பள்ளிகளில் பயிலும், 2,544 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும், யு.கே.சி., நகரிலுள்ள சமையல் கூடத்தில், நகராட்சி கமிஷனர் சுகந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம் மற்றும் சுவை குறித்து பரிசோதனை செய்தார்.

அப்போது, ‘அரசால் தினமும் வழங்கப்பட்டுள்ள உணவு பட்டியல்கள், தரமாக தயாரிக்கவும், சூடாகவும், சுவையாகவும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும், உணவு தயாரிக்கும் பகுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்,’ என அறிவுறுத்தினார்.

இங்கு தயாரிக்கும் உணவு, இரு வாகனங்கள் வாயிலாக, பாதுகாப்பாக பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில், வழங்கப்படுகிறது.

உணவு வழங்கிய விபரத்தினை, பள்ளியின் பொறுப்பு அலுவலர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பின், நகராட்சி பொறுப்பு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் அதனை உறுதி செய்கின்றனர், என தெரிவித்தார்.

ஆய்வின் போது, சுகாதார ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, பள்ளிகளுக்கும் நேரடியாகச்சென்று, காலை உணவு தரம் மற்றும் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement