பொள்ளாச்சியில் அமைகிறது ‘பிலிம் டூரிசம்’: அதிகாரிகள் கள ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், ‘பிலிம் டூரிசம்’ ஏற்ற பகுதியாக உள்ளதா என மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை குழு மற்றும் தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சியில் இயற்கை, ஆன்மிகம் நிறைந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு, தென்மாநில சுற்றுலா உறுப்பினர், தொழில்வர்த்தக சபை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் மை பாரத் திட்டத்தின் கீழ் நாட்டின், 100 முக்கிய சுற்றுலா மையங்களை இளைஞர்கள், மாணவர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ‘விக்சித் பாரத், 2047’ திட்டத்தில், யுவா டூரிசம் குரூப் துவங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், சினிமா படப்பிடிப்புகளுக்கு ஏற்ற, இயற்கை காட்சிகள், வயல்வெளிகள், கிராமங்கள் உள்ளன. வருங்காலத்தில் தென்மாநில படப்பிடிப்பின் தலைநகரமாக மாற வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில், ‘பிலிம் டூரிசம்’ மேம்படுத்த ஏற்ற பகுதியாக உள்ளதா என, மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மோலண்மை கழக சிறப்பு நிலைக்குழு தலைவர் சேவக் விஜய், தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, அக் ஷயா கல்லுாரி தலைமை செயல் அதிகாரி கபிலன் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்தும் வகையில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகள் பார்வையிடப்பட்டது. அதன்பின், தேவையான வசதிகள் குறித்தும் தொழில்வர்த்தக சபையினர், அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொழில்வர்த்தக சபை தலைவர் கூறியதாவது:

பொள்ளாச்சி சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இருப்பதுடன், பிலிம் டூரிசத்தை மேம்படுத்தலாம். இங்கு, அதற்கான இடங்கள் உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடந்த பகுதிகளை அடையாளப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்புக்கு வருவோருக்கு தேவையான வசதிகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதற்கட்டமாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், படப்பிடிப்புக்கு உகந்த பகுதியாக என பார்க்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement