அரசு பள்ளிகளில் சவாலாகும் துாய்மை, பாதுகாப்பு பணிகள்: 14 ஆண்டுகளாக நிரந்தர அடிப்படை பணியாளர் நியமனம் இல்லை

மதுரை: அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக நிரந்தர அடிப்படை பணியாளர்கள் நியமனம் நடக்காததால் துாய்மை, பாதுகாப்பு பணிகள் சவாலாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேல் அரசு பள்ளிகள் உள்ளன. 14 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளிகளில் தலா ஒரு ஓ.ஏ., (அலுவலக உதவியாளர்), இரவு வாட்ச் மேன், வாட்டர் மேன், துாய்மைப் பணியாளர் என நிரந்தர அடிப்படை பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் இருந்தனர். தற்போது ஒரு மாவட்டத்திற்கு 5, 6 என்ற எண்ணிக்கையில் தான் நிரந்தர பணியாளர் உள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. 2012க்கு பின் நிரந்தர பணியிடங்களில் 'அவுட்சோர்ஸ்'ல் பணியாற்றுகின்றனர். ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்பாததால் பள்ளிகளில் துாய்மை, பாதுகாப்பு பணிகள் கேள்விக்குறியாகியுள்ளன.

தலைமையாசிரியர்கள் கூறியதாவது: 2012க்கு முன் நியமிக்கப்பட்ட அடிப்படை பணியாளர்கள் தற்போது ரெக்கார்டு கிளார்க், ஜூனியர் அசிஸ்டென்ட் என அடுத்தடுத்து பதவி ஓய்வு பெற்று விட்டதால், தற்போது அடிப்படை பணியாளர்களே பள்ளிகளில் இல்லை. அவர்களின் பணிகளை யார் மேற்கொள்வது. இதற்காக, தலைமையாசிரியர் தங்கள் சொந்தப் பணத்தில் தற்காலிக ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட துாய்மைப் பணியாளர்களுக்கும் உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. பள்ளிகளில் அடிப்படை பணிகளை மேம்படுத்த அரசால் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களை நிரப்ப முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement