'மா' சாகுபடி பயிர் மேலாண்மை பயிற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் சார்பில், 'மா' சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து, 5 நாள் பயிற்சி, மத்துார் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் துவங்கியது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், வேளாண் அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடு களையும், 'மா' சாகுபடியில், பழ ஈ பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்களையும் எடுத்துரைத்தார். தோட்டக்கலை துறை இணை இயக்குனர் குணவதி தலைமை வகித்து பேசுகையில், தோட்டக்கலை துறையின் மானிய திட்டங்களையும், மண்புழு உரம் இடுவதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ஸ்ரீவித்யா, 'மா' சாகுபடியில் ரகத்தேர்வு, கிளைபடர்வு மேலாண்மை மற்றும் அறுவடைக்கு பின் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கினார். வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு மற்றும் மண்ணியல் தொழில்நுட்ப வல்லுனர் குணசேகர், 'மா' சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, இலை வழி நுண்ணுாட்டச்சத்து தெளித்தல் குறித்து பயிற்சி வழங்கினார்.
இதில், 'மா' சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்ப இடுபொருட்களான, 'மா' இலை வழி நுண்ணுாட்டச்சத்து கலவை, 'மா' இனக்கவர்ச்சி பொறி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Advertisement