இந்திய சட்டத்தை மதித்து நடந்தால் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி: மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமானால், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். விதிமுறைகளை மதிக்காமல் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கு அனுமதி கிடையாது என, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, மத்திய அரசு 'செக்' வைத்துள்ளது.
சாட்டிலைட் மூலம் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தை, இந்தியாவில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இந்நிறுவனம் இந்திய மண்ணில் தனது வர்த்தகத்தை தொடங்க மத்திய அரசு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.
கறார் காட்டும் மத்திய அரசு:
இந்திய சட்ட விதிகளின்படி, சாட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி உள்நாட்டிலேயே தரைவழி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே, சட்ட அமலாக்க அமைப்புகளால், விதிமீறல்களை கண்காணிக்க முடியும். ஆனால், இந்த விதிமுறைகளை, ஸ்டார்லிங்க் நிறுவனம் இதுவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு விதிகளுக்கு உடன்பட்டு, உள்நாட்டிலேயே பேஸ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி தரப்படும். இதில் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது. இந்திய சட்டத்தை மதித்தால் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு:
இந்தியாவின் உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீட்டால்தான் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாகிறது என எலான் மஸ்க் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் யாருக்காகவும் விதிகள் தளர்த்தப்படாது எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
முந்துவது யார்?
இந்தியாவில் சாட்டிலைட் வழி இன்டர்நெட் சேவையை தொடங்க, சுனில் பார்தி மிட்டல், முகேஷ் அம்பானி மற்றும் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் மல்லுக்கட்டி வருகின்றன.
இந்நிலையில் புளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல் பேசியதாவது: சாட்டிலைட் வழி இன்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்க நாங்கள் விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே எங்களுடைய தரைவழி கட்டுப்பாட்டு மையங்கள் இந்தியாவில் தயாராக உள்ளன. சாட்டிலைட்களும் வானில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. எனவே, எலான் மஸ்க்கிற்கு முன்பாக எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
துவங்குகிறது புதிய அத்தியாயம்; உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; பியூஷ் கோயல்
-
2029 ஏப்ரல் முதல் பி.எஸ்.,-7 விதிகள் அமல்: மத்திய அரசு அதிரடி
-
ரஷ்யாவுக்கு உதவுகிறது அமெரிக்கா!: உக்ரைன் குற்றச்சாட்டு
-
தசராவை முன்னிட்டு டில்லியில் உருவான 221 அடி உயர ராவணன் பொம்மை
-
பாக்., எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் உஷார்
-
கவுன்டரில் ரயில் டிக்கெட் எடுத்தாலும் இனி இன்சூரன்ஸ் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு