கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

7

கோவை: பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் முதல்வர் விஜய் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி ரோடு வழியாக சுமார் 10 கி.மீட்டருக்கு ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

சுமார் ஒரு மணி நேர ரோடு ஷோவுக்குப் பிறகு முதல்வர் விஜய் அறிவுலகம் வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். உள்ளே சென்று பார்வையிட்ட அவரை, ரோபா வணக்கம் சொல்லி வரவேற்றது. பின்னர், முதல் வாசகராக நூலகப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதன்பிறகு பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்த அறவுலகம் திமுக ஆட்சி காலமான 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கோவை நகரின் முக்கிய பகுதியான காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான, 6.98 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில், 1.98 லட்சம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட்டது. புத்தகத்தை பிரித்து வைத்திருப்பதுபோல் வடிவமைத்து இந்த அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.245 கோடியில் கட்டுமான பணி, ரூ.50 லட்சத்துக்கு புத்தகங்கள், இ-புத்தகங்கள், ரூ.5 லட்சத்துக்கு கம்ப்யூட்டர்கள், படிப்பதற்கான வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் என ரூ.301 கோடியில் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 2024 நவ., 6ல் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 2026 ஜனவரியில் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டுமான பணி முடியாததால் திறக்கப்படவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தபின், கட்டுமானப் பணிகள் முடிந்து, முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்துள்ளார்.

தரை தளம் - மாற்றுத்திறனாளிகள் நூலகம், ஆடிட்டோரியம், கோளரங்கம்

1ம் தளம் - வரவேற்பறை, அறிவியல் மையம்

2ம் தளம் - சொந்த நூல் படிப்பிடம், சிறுவர் நூலகம்

3ம் தளம் - போட்டித் தேர்வு பயிற்சி மையம், நூலகம், நிர்வாகப் பிரிவு

4ம் தளம் - வரலாற்று நூல்கள், தமிழ் நூல்கள், பருவ இதழ்கள்

5ம் தளம் - ஆங்கில நூல்கள், இன்குபேஷன் சென்டர்

6ம் தளம் - ஆங்கில நூல்கள், இன்குபேஷன் சென்டர்

7ம் தளம் - அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம்

Advertisement