அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு

1

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை தவெகவுக்கு இழுக்க சதி நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை; தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுக ஆட்சியில் தொடங்கிய பல்வேறு திட்டங்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் பெயரை ஒட்டிக்கொண்டு உரிமை கொண்டாடும் அளவிற்கு மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்! இத்தகைய பெருமைமிக்க சாதனைகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலான தியாக வரலாற்றைக் கொண்ட நம் கழகத்தை, எத்தனையோ எதிரிகளும் துரோகிகளும் அழித்துவிடத் துடித்தபோதும், என் உயிரினும் மேலான எனதுருமை கழகத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் அசைக்க முடியாத பேராதரவோடு, அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து கழகத்தை மீட்டுெடுத்து, கம்பீரமாக வீறுநடை போடச் செய்திருக்கிறோம்! அதற்குச் சான்றாகத்தான்,

2026ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், அசாதாரணமான அரசியல் சூழலிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கின. அவற்றையெல்லாம் கடந்து, 47 எம்எல்ஏக்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என, சாதாரண மக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதல்வரோ, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வினோதத்திலும் வினோதம்! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது! ஏழை, எளிய மக்களும், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே திண்டாடுகிறார்கள்!

தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுக்கப்படுகின்றன! ஆட்சியமைத்து சில மாதங்களிலேயே அனைத்து நிலையிலும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது! மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அதிமுகவை எவ்வாறு பலவீனப்படுத்தலாம்; அதன் எம்எல்ஏக்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிமுக அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல. அது லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்.

இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement