போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா

2

புதுடில்லி: பஞ்சாப்பில் போதைப்பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்கியது போன்று, பஞ்சாப்பில் போதைப்பொருள் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நோக்கமாக இருந்து வருகிறது.

அண்மையில் பஞ்சாப்பின் மான்சாவில் போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோட்டா சுட்டுக் கொல்லப்பட்டார். போதைப்பொருள் விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் நேரலை செய்த போது அவர் கொல்லப்பட்டார். இதனால், போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவத்மானிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கேட்டுள்ளார்.

பஞ்சாப் அரசை கடுமையாக சாடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்; போதைப்பொருள் புழக்கத்தாலும், ரவுடிகளின் அராஜகத்தாலும், பஞ்சாப் மாநிலம் திண்டாடி வருகிறது. பஞ்சாப் மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது?

அழுத்தம் காரணமாக தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்தது, மான்சாவில் போதைப்பொருள் எதிர்ப்பாளர் பர்விந்தர் சிங் ஜோட்டா பகலில் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் பஞ்சாப்பின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பஞ்சாப் அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்கும்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல் பாதுகாப்பு குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். பஞ்சாப்பில் போதைப்பொருள் மற்றும் குற்ற வலைப்பின்னல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை, என்று கூறினார்.

Advertisement