குடியுரிமை பெற்று தருவதாக ரூ.60 லட்சம் மோசடி ஜெர்மனில் இருந்து டில்லி வந்த மூதாட்டி கைது

புதுடில்லி: ஜெர்மன் குடியுரிமை பெற்று தருவதாகக் கூறி, 60 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, 64 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.

டில்லியை சேர்ந்தவர், பிரஞ்சல் குமார். அவர், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின், லுாசர்ன் நகரில் எம்.பி.ஏ., படித்தார். அப்போது, 2021ல், அவருக்கு பூனம் ஜெஸ்லர் மற்றும் அவரது கணவர் ஜெஸ்லர் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் பூனம் , மத்திய பிரதேசத்தின் சட்டத்துறை செயலாளராக பணியாற்றியவரின் மகள். பூனம் மற்றும் ஜெஸ்லர் ஆகியோர் ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தனர்.

உலகளாவிய குடிபெயர்வு தொடர்பான ஆலோசனை சேவைகளை பூனம் மற்றும் ஜெஸ்லர் நடத்தி வருவதாகவும், பல்வேறு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுத் தருவதில் பூனமுக்கு அனுபவம் இருப்பதாகவும், பிரஞ்சல் குமாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

பிரஞ்செல் குமாருக்கு அமெரிக்காவில் குடியுரிமை பெற விருப்பம் இருந்துள்ளது. அதற்குப் பதிலாக, ‘ஆறே மாதங்களில் ஜெர்மன் குடியுரிமை பெறலாம்; இதற்கு 1.10 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்’ ஜெஸ்லர் தம்பதியினர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

படிப்பு முடிந்து டில்லி திரும்பிய பிரஞ்செல் குமார், இது குறித்து தன் தந்தையிடம் விவாதித்துள்ளார். ஜெர்மன் குடியுரிமை பெறுவதற்காக, 50 லட்சம் ரூபாயை முதலில் செலுத்தும் படி, பூனம் தம்பதியினர் கூறியுள்ளனர். அதற்கான ரசீது மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களையும் தெரிவித்தனர். பூனம் தம்பதியை நம்பி அவர்கள் அளித்த வங்கிக் கணக்கிற்கு 50 லட்சம் ரூபாயை, குமார் மாற்றியுள்ளார்.

மீதமுள்ள தொகையையும் செலுத்துமாறு பூனம் அழுத்தம் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, மேலும் 10 லட்சம் ரூபாயை அவரது கணக்கிற்கு குமார் மாற்றியுள்ளார். இருப்பினும், ஜெர்மன் குடியுரிமை பெறுவது தொடர்பாக அவர்கள் எந்த ஆதாரமும் வழங்கவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, தங்களை அவர்கள் ஏமாற்ற திட்டமிட்டு இருந்ததை பிரெஞ்சல் குமார் உணர்ந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டில்லி, வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில், பிரெஞ்சல் குமார் புகார் செய்தார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பூனம் தம்பதிக்கு எதிராக போலீசார், ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை பிறப்பித்தனர். அத்துடன் அவர்கள், இந்தியாவில் வைத்திருந்த வங்கிக் கணக்ககையும் முடக்கினர்.

இந்நிலையில் அக்., 13ல், பூனம், டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது, தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பூனமை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீசார் மனு செய்தனர். அதன்படி, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement