அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சிவக்கொழுந்து உறுதி
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்துவை சந்தித்து பேசினர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளர், இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், பதவி உயர்வு மற்றும் போனஸ் வழங்குதல் பற்றிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது.
சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் சிவக்கொழுந்து இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என, உறுதியளித்தார்.
அங்கன்வாடி பணியாளர்களின் குறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்க வேண்டும் என, துறைச் செயலாளர், இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.