மேகமலையை புலிகள் காப்பக பகுதியில் இருந்து நீக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

தேனி: மேகமலை பகுதியில் புலிகள் இல்லை அவ்வப்போது கேரளாவில் இருந்த வரும் புலிகளை கணக்கு காட்டி புலிகள் உள்ளதாக கூறுகின்றனர். மேகமலை பகுதியை புலிகள் காப்பக பகுதியில் இருந்து நீக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெகடர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, வேளாண் இணை இயக்குநர் மீனாகுமாரி, கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா, மாவட்ட வன அலுவலர் கிரண், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் பேசியதாவது:

பாண்டியன், பெரியகுளம்:மாவட்டத்தில் 33 ஆயிரம் இறவை பாசன கிணறுகள் உள்ளன. போதிய மழை இன்றி கிணறுகள் வறண்டுள்ளன. வறட்சியால் கிணறுகளை ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய பரிந்துரைக்க வேண்டும். வைகை அணை நீர்தேக்கத்தை துார்வார வேண்டும்.

வெற்றிவேல், அகமலை: அகமலை, மேகமலை பகுதிகளில் விவசாய பொருட்கள், விவசாயிகளின் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறை சோதனை சாவடிகளில் அனுமதிக்க வேண்டும். மேகமலை புலிகள் காப்பகத்தில் 22 புலிகள் உள்ளன என்பது பொய். புலி இருந்திருந்தால் கால்நடைகள், மனிதர்களை தாக்கி இருக்கும். கேரளம் பகுதியில் இருந்து வந்த புலிகளை தவறாக கணக்கிட்டு வனத்துறை அறிக்கை அளித்துள்ளது. மேகமலை பகுதியை புலிகள் காப்பக பகுதியில் இருந்து நீக்க வேண்டும். அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலெக்டர்: விவசாயிகள் பிரச்னையை நேரடியாக தெரிவிக்கவும். சோதனை சாவடி வழியாக விவசாயிகளின் வீடுகள் பராமரிக்க பொருட்கள் எடுத்து செல்ல அதற்கான கமிட்டியில் முறையான அனுமதி பெற வேண்டும். இந்த கமிட்டி அக்.,22,23ல் கூட உள்ளது. காடுகளும் தேவை, அங்கு வசிப்பவர்களும் தேவை .

தண்ணீர் திறக்க வேண்டும்





சீனிராஜ், கொடுவிலார்பட்டி: 18 ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாயில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மானாவரி விவசாயிகள் மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தப்புக்குண்டு சிப்காட்டில் இரும்பு ஆலை அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். அந்த ஆலை அமைந்தால் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் இதனால் விவசாயம், குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஆலை அமைவதை ரத்து செய்ய வேண்டும்.

சுந்தர், லட்சுமிபுரம்: உரங்கள், பூச்சி மருந்து விலை உயர்வு, எல்நினோ பாதிப்பால் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வி.பி.,ஜிராம்ஜி திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயம் பாதித்துள்ளதால் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வாங்க ஆட்கள் இல்லை.

2494 பேரின் பயிர்கடன் தள்ளுபடி





கூட்டுறவு இணைப்பதிவாளர்: எந்த கடனையும் வசூலிக்க வேண்டாம், ஏல நடவடிக்கைகள் இல்லை. மாவட்டத்தில் 2494 பேரின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு 64 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ரவிசங்கர், பெரியகுளம்: வேளாண் பொறியியல் துறை சார்பில் மானியத்தில் வழங்கப்படும் டிராக்டர் வழங்குவதில் வெளிப்படை தன்மை இல்லை. கும்பக்கரை, சுருளி அருவியில் வனத்துறை மூலம் மட்டும் வசூலிக்க அனுமதி உள்ளது. ஆனால், ஊராட்சி நிர்வாகங்கள் அனுமதியின்றி வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் பணம் யாருக்கு செல்கிறது என ஆய்வு செய்ய வேண்டும்.

பிரபாகரன், பாலகிருஷ்ணாபுரம்: மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைத்து அரசு துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். யூ.டி.ஆர்., கணினி பதிவேற்றத்தால் இரு சப்கலெக்டர் அலுவலகங்களிலும் தலா 600 மனுக்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண சப்கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

மஞ்சளாறு அணையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், போடி வடக்கு மலை அடிவாரத்தில் விவசாயிகள் நிறுத்தி செல்லும் வாகனங்களில் இருந்து பொருட்கள், பெட்ரோல் திருடுகின்றனர், 18 ம் கால்வாயில் ரூ.12 கோடியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும். தட்கல் முறையில் பணம் செலுத்தி விண்ணப்பித்த விவசாயிகள் ஓராண்டிற்கு மேலாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரினர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

Advertisement