இன்சூரன்ஸ் கிளைமுக்கு அதிக தாமதம் இருப்பினும் சிகிச்சை செலவு தர உத்தரவு

கோவை: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கிளைம் செய்வதற்கு அதிக தாமதம் செய்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிகிச்சை செலவு தொகை வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சிங்காநல்லுார், நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை. தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். குடும்ப மருத்துவ காப்பீடு என்பதால் லோகதானுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

லோகநாதன் 2023 ஜன. 27ல் வீட்டில் விழுந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ செலவு, 2.42 லட்சம் ரூபாய் கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்தது.

புதிய சுகாதார காப்பீட்டு திட்ட நிபந்தனைகளின்படி, நோயாளி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, 30 நாட்களுக்குள் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் 18 மாதங்களுக்கு பிறகு விண்ணப்பித்துள்ளதால், கோரிக்கை ஏற்கப்படாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் பதில் அளித்தது.

லோகநாதன் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் கூடுதல் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு :

புகார்தாரர் அளவுக்கு அதிகமான தாமதத்திற்கு பிறகு கோரிக்கை சமர்ப்பித்திருப்பதை கருத்தில் கொண்டு, எதிர்மனுதாரர் மீது எந்த சேவை குறைபாட்டையும் சுமத்த முடியாது. இருப்பினும், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிகிச்சை பெற்ற தொகையில், புகார்தாரரருக்கு 67,440 ரூபாய் மட்டும், எதிர்மனுதாரர் திரும்ப செலுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement