தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு ரூ.260 கோடி நன்கொடை: வாரி வழங்கியது லாட்டரி நிறுவனம்
புதுடில்லி: மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவைச் சேர்ந்த, ‘டைகர் அசோசியேட்ஸ்’ என்ற லாட்டரி நிறுவனம், 2025 – 26ல், தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு, மொத்தம், 260 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், 2025 – 26ல், தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விபரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளன. அதன்படி, இந்த நிதியாண்டில் மொத்தம், 191.19 கோடி ரூபாயை தி.மு.க., நன்கொடையாக பெற்றுள்ளது. இதில், ‘டைகர் அசோசியேட்ஸ்’ மட்டும், 125 கோடி ரூபாய் அளித்துள்ளது.
அதே போல், மொத்தம், 161.36 கோடி ரூபாயை அ.தி.மு.க., நன்கொடையாக பெற்றுள்ளது. இதில், 135 கோடி ரூபாயை, ‘டைகர் அசோசியேட்ஸ்’ வழங்கி உள்ளது. 2024- – 25ம் நிதியாண்டில், இரு கட்சிகளுக்கும் சேர்த்து, இந்நிறுவனம், 110 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், நடப்பு ஆண்டில் தன் பங்களிப்பை இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், இரு நிதியாண்டுகளில் மட்டும், இந்த இரு கட்சிகளுக்கும் இந்நிறுவனம் மொத்தம், 370 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் கூட்டாளி சுப்பையன் நாகராஜன், த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனாவின் மாமனாரும், பிரபல லாட்டரி தொழிலதிபருமான சாண்டியாகோ மார்ட்டினின் நீண்டகால கூட்டாளி ஆவார். மற்ற நிறுவனத்திலும் இருவரும் கூட்டாளிகளாக உள்ளனர்.
இது தவிர, ‘புருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை, மதிப்பீட்டு நிதியாண்டில், தி.மு.க.,வுக்கு மட்டும், 25 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. பெரும்பாலான நன்கொடைகள், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டுள்ளன.
மேலும்
-
சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
-
பழநி மோசடி பத்திரப்பதிவு வழக்கு இருவருக்கு அக்.21 வரை சிறை
-
வெளியூர் செல்லும் பயணியரின் வசதிக்காக 5 இடங்களில் காவல் உதவி மையங்கள் திறப்பு
-
தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்; திடீரென ஒலித்த அலாரத்தால் பரபரப்பு
-
டீசல் நிலுவைத்தொகை வழங்காத தமிழக அரசு பஸ் போக்குவரத்து முடங்கும் ஆபத்து
-
திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை: வாரி வழங்கியது லாட்டரி நிறுவனம்