டீசல் நிலுவைத்தொகை வழங்காத தமிழக அரசு பஸ் போக்குவரத்து முடங்கும் ஆபத்து

சேலம்: ‘‘அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய நிதியின்றி, கடந்த, 15ல் தமிழகத்தில் உள்ள, 23 மண்டலங்களில், 3 நாட்கள், கடனுக்கு டீசல் வாங்கப்பட்டது. அதன்படி வரும், 18 வரை பஸ்களை இயக்கலாம். பின் இயக்க முடியாத சிக்கல் ஏற்படும்,’’ என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் தெரிவித்தார்.

அவர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் விஜய், மகளிருக்கு வெற்றிப்பயண திட்டத்தை, கடந்த, 2ல் தொடங்கிவைத்தார். இதில் டவுன் பஸ்கள், எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ், சில புறநகர் பஸ்களில் மகளிர் இலவச பயணம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய நிதியின்றி, கடந்த, 15ல் தமிழகத்தில் உள்ள, 23 மண்டலங்களில், 3 நாட்கள், கடனுக்கு டீசல் வாங்கப்பட்டது. அதன்படி வரும், 18 வரை பஸ்களை இயக்கலாம். பின் இயக்க முடியாத சிக்கல் ஏற்படும்.

ஏற்கனவே, 68 சதவீத வருவாய் குறைந்துள்ளது. 32 சதவீத வருவாயில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது டீசல் தட்டுப்பாடால், ஆயுத பூஜை, விடுமுறைக்கு அனைவரும் ஊர் திரும்புவர். அவர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் சிறப்பு பஸ்களும், தற்போது இயக்க முடியாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் அரசு பஸ்களை இயக்கவில்லை என்றால் ஸ்தம்பித்து விடும். ஆயுதபூஜை முடிந்த பின், மகளிர் வெற்றிப்பயணம் திட்ட பஸ்களை இயக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் அத்திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை உடனே வழங்கினால் மட்டுமே, பஸ் சேவை தடையின்றி தொடரும். மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வழங்க வேண்டிய ஓய்வுகால பணப்பலனும் வழங்க முடியாமல் தடைபட்டுள்ளது.

பஸ்களுக்கு டயர் வாங்கக்கூட முடியாமல், ‘ரீடயரிங்’ செய்து பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களின் டயர்களை கழற்றி, இயங்கிக்கொண்டுள்ள பஸ்களில் பொருத்தி உள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ‘ரீடயர்’ செய்த டயர்களை, முன் சக்கரத்தில் பொருத்தக்கூடாது என்ற நிலையிலும், வேறு வழியின்றி இயக்குகிறோம்.

இத்திட்டத்துக்கு தமிழகம் முழுதும், 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மாதந்தோறும், 500 கோடி ரூபாய் வீதம் வழங்குவர். முதல், 15 நாட்களுக்கு, 250 கோடி ரூபாய் என்பதை, நாங்கள் முதலீடு போட்டு, 15 நாட்கள் இயக்கிவிட்டோம். தற்போது எங்கள் துறையில் பணம் இல்லை. ஒவ்வொரு மாத கடைசியில் தான், 500 கோடி ரூபாய் வரும். இந்த மாதம், 15 நாட்களுக்குரிய தொகை கொடுத்தால் தான், பின் வரும் நாட்களில் பஸ்களை இயக்க முடியும்.

மகளிர் வெற்றிப்பயண திட்டப்படி, போக்குவரத்து துறை முதலீடு செய்து பஸ்களை இயக்க வேண்டும். மாத முடிவில், அதற்கான தொகையை அரசு வழங்ககும். ஆனால் தற்போதைய சூழலில் போதிய நிதியின்றி, அடுத்த இரு நாட்களில் போக்குவரத்துத்துறை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement