நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு

மேட்டூர்,:மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆக., 1 முதல் டிச., 15 வரை, 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர், பாசனத்துக்கு திறக்கப்படும். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த ஆக., 1ல் நீர்திறக்கவில்லை.

பின் விவசாயிகள் கோரிக்கைப்படி, கடந்த மாதம், 7 மதியம் முதல், 17 மதியம் வரை, 10 நாட்கள் வினாடிக்கு, 400 கனஅடி நீர், கால்வாயில் திறக்கப்பட்டது.

வழக்கமாக மேட்டூர் தாலுகாவில் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில் கால்வாய் நீரை பயன்படுத்தி, செப்டம்பர் முதல் விவசாயிகள் நெல் சாகுபடி தொடங்குவர். நடப்பாண்டு ஒரு மாதம் தாமதமாக, அக்டோபரில் தொடங்கினர். அதேபோல் நவப்பட்டியில், 1,125 ஏக்கர், கோல்நாயக்கன்பட்டியில், 565 ஏக்கரில் நெல் சாகுபடி செய்வர். நடப்பாண்டு கால்வாயில் நீர் திறக்காததால் கிணற்று பாசனம் மூலம் நவப்பட்டியில், 750 ஏக்கர், கோல்நாயக்கன்பட்டியில், 425 ஏக்கரில் மட்டும் நெல் சாகுபடியை தொடங்கினர். இதன்படி இரு ஊராட்சிகளிலும் நெல் சாகுபடி பரப்பு, 515 ஏக்கர் குறைந்துள்ளது.

Advertisement